களப்பிரர் யார்?

தமிழக வரலாற்றாசிரியர்கள் மேலே கூறிய களப்பிரர் பற்றிய வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டு வந்த களப்பிரர் யார் என்பது பற்றியும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும் பலவகையான கருத்துகளைக் கூறியுள்ளனர். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஈண்டுக் காண்போம்.
  களப்பிரர் வேங்கடத்திலிருந்து வந்தவர்கள்
தமிழகத்தின் வட எல்லையான வேங்கடத்தையும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்த கள்வர் அல்லது களவர் இனத்தவரே களப்பிரர் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர். சங்க காலத்தில் வேங்கடமலைப் பகுதியைப் புல்லி என்ற அரசன் ஆண்டு வந்தான் என்பதை மாமூலனார் என்ற புலவர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
(அகநானூறு, 61:11-13)
இவ்வடிகளில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டைப் பணியச் செய்தவன் என்றும், திருவிழாக்களை உடைய மிகச் சிறப்புவாய்ந்த வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் இனத்தவன் என்பது பெறப்படும். இக்கள்வர் இனத்தவர் அண்டை நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வரும் களவுத் தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் ஆவர்.
புல்லி ஆண்டு வந்த வேங்கட மலைப்பகுதியில் வேற்றுமொழி வழங்கியதாக மாமூலனார் மற்றோர் அகநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகிறார்.
புடையல்அம் கழல்கால் புல்லி குன்றத்து….
மொழிபெயர் தேஎம்
(அகநானூறு, 295:11.15)
(புடையல் – ஒலிக்கின்ற; அம் – அழகிய; கழல் – வீரக்கழல்; குன்றம் – வேங்கடமலை; மொழிபெயர் தேஎம் – வேற்றுமொழி வழங்கும் நாடு; தேஎம் – தேயம், தேசம், நாடு.)
வேங்கட மலைப்பகுதியை ஆண்டு வந்த புல்லியின் கள்வர் இனத்தவர் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்து தமிழ்நாடடின் பல பகுதிகளைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி ஆண்டனர். அக்கள்வர் இனத்தவரே களப்பிரர் ஆவர் என்று கருதுகின்றனர். கள்வர் என்ற சொல் தமிழில் களவர் (களவு செய்பவர்கள்) என்றும் வழங்கும். களவர் என்பது வடமொழியில் களப்ரா என வழங்கும். அதுவே தமிழில் களப்பிரர் என்று வழங்கியது என்று கூறுகின்றனர்.
  களப்பிரர் முத்தரையரின் மூதாதையர்
கி.பி. 650 முதல் கி.பி. 860 வரை முத்தரையர் என்போர் சோழ நாட்டில் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியைச் செந்தலை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். செந்தலை என்னும் ஊர் தற்போது, தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊருக்கு அருகில் ஒரு சிற்றூராக உள்ளது. இம்முத்தரையர் மேலே குறிப்பிட்ட களவர் இனத்தவராகிய களப்பிரர் குலத்தின் வழி வந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.
கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர். களப்பிரர் முத்தரையரின் மூதாதையர் என்பதை வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன் (கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்.
மேலே கூறியவற்றால் களப்பிரர் வேங்கடமலைப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதும், அவர்கள் களவர் இனத்தவர் என்பதும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றையும் கைப்பற்றி ஆண்டனர் என்பதும், அதனால் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர் என்பதும் புலனாகும்.
  களப்பிரர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்
சோழ நாட்டில் களப்பாள் என்ற ஊர் இருந்தது. இவ்வூரில் முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப்பெற்றான். அவன் வழியினரே களப்பாளர் எனவும், களப்பராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வந்தனர். பாண்டிய நாட்டைக் கைப்பற்றியவர்களை வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூற, தளவாய்புரச் செப்பேடு களப்பாளர் என்று குறிப்பிடுகிறது. எனவே சோழ நாட்டில் வாழ்ந்து வந்த களப்பாளரே களப்பிரர் ஆவர் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
  களப்பிரரும் கங்கரும் ஒருவரே
கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் வலிமையின்மையைப் பயன்படுத்திக்கொண்டு கங்கர்கள் பாண்டிய நாட்டில் ஊடுருவினர் என்றும், அக்கங்கர்களே களப்பிரர்கள் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்துப் பொருந்தாது. ஏனெனில் கங்கர்களைச் சிலப்பதிகாரமும், பல்லவர் காலத்தில் தோன்றிய செப்பேடுகளும், கல்வெட்டுகளும் கங்கர் என்றே குறிப்பிடுகின்றன. எந்த ஒரு இடத்திலும் அவர்களைக் களப்பிரர் என்று குறிப்பிடவில்லை.
கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்,
பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்
(சிலப்பதிகாரம், காட்சிக் காதை:156-157)
  களப்பிரர் கர்நாடகத்தில் இருந்து வந்தவர்கள்
களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன. வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.

 • பெரிய புராணம்

 • பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார்.
  கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல்
  மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய்
  யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர்
  சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான்
  வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்
  சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்
  சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால்
  கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்.
  (பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12)
  (வடுகக் கருநாடர் – வடுகு என்னும் ஒரு மொழியைப் பேசும் கருநாடர்; சிந்த – அழிய; செரு – போர்; மதுராபுரி – மதுரை மாநகர்.)

 • கல்லாடம்

 • கி.பி. பதினோராம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் நூல் கல்லாடம். இது ஓர் அகப்பொருள் நூல். இந்நூலை இயற்றியவர் கல்லாடர் என்பவர் ஆவார். இவர் இந்நூலில் கருநாட வேந்தன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும், அவன் சமணர்களோடு சேர்ந்து கொண்டு, சிவபெருமானுக்குச் சைவர் செய்யும் திருப்பணிகளைச் செய்ய விடாமல் தடுத்தான் என்றும் குறிப்பிடுகிறார்.
  படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து
  மதுரை வவ்விய கருநாட வேந்தன்
  அருகர்ச் சார்ந்து அரன்பணி அடைப்ப
  (கல்லாடம்,56)
  (உடன்று-போர் செய்து; பஞ்சவன்-பாண்டியன்; துரந்து-விரட்டியடித்து; வவ்விய-கைப்பற்றிய; அருகர்-சமணர்; அரன்-சிவபெருமான்; அடைப்ப-தடுக்க)

 • வேள்விக்குடிச் செப்பேடு

 • வேள்விக்குடிச் செப்பேடு முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765-790இல்) வெளியிடப்பட்டதாகும். பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.
  அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
  களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்
  (அளவரிய-எண்ணற்ற; அதிராசர்-பாண்டிய அரசர்கள்; அகலிடம்-அகன்ற பாண்டிய நாடு; களப்ரன் - களப்பிரன்; கலியரசன்-கலி அரசன்)
  எனவே பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடும் கருநாட அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடும் களப்ரன் எனும் கலி அரசனும் ஒருவனே எனலாம். கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்று பொருள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழன் அல்லன் ஆதலானும், சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனை வேள்விக்குடிச் செப்பேடு கலிஅரசன் எனக் குறிப்பிடுகிறது.
  கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளில் கலிகுலம், கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக் கலிதேவன் என்பவனைப் பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் கூறுகின்றன.
  களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (கர்நாடக மாநிலத்தின்) பேலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. களபோரா குலத்தினர் சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுச்சியுற்றனர். அவர்களால் தெற்கில் தொண்டை மண்டலத்தில் ஆண்டு கொண்டிருந்த பல்லவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை எனவே அவர்கள் அக்காலத்தில் வலிமை குன்றியிருந்த சோழர்களையும், பாண்டியர்களையும் வென்று அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இந்தக் களபோரா இனத்தவரே களப்பிரர் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.
  மேற்கூறியவற்றால் சங்க காலத்தின் இறுதியில் கி.பி. 250அளவில், படையெடுத்து வந்து பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிரர் கர்நாடகத்துடன் (கன்னட நாட்டுடன்) தொடர்பு கொண்டவர்கள் என்பது புலனாகும். இருப்பினும் இவர்கள் பண்டைக் கர்நாடகத்தில் எப்பகுதியிலிருந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தார்கள் என்பதை அறிய முடியவில்லை.. களப்பிர மன்னர்கள்
  களப்பிரர் காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட களப்பிர மன்னர்கள் பலர் ஆவர். சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்குப் பின்னும், கடுங்கோனுக்கு முன்னும் பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர் என்று வேள்விக்குடிச் செப்பேடும் சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன. ஆனால் அக்களப்பிர மன்னர்கள் யார் யார் என்பது பற்றியும், அவர்களின் கால வரையறை பற்றியும் அறிந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் கிடைத்துள்ள சான்றுகளை நோக்கும்போது, ஒரு சில களப்பிர மன்னர்களைப் பற்றி அறிய முடிகிறது.

 • களப்ரன்

 • சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து, அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களை வென்று கைப்பற்றியவன் களப்ரன் என்பவன ஆவான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. தமிழ் நாட்டில் களப்பிரர் ஆட்சியை முதலில் நிலைநாட்டியவன் இவனே எனலாம். கருநாடகத்திலிருந்து படையெடுத்து வந்து மதுரையைக் கைப்பற்றியவன் எனப் பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடுகின்ற அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு கலியரசன் எனக் குறிப்பிடுகின்ற இக்களப்ரனும் ஒருவனே என்பர்.
  களப்ரன் என்னும் இவன் மதுரையைக் கைப்பற்றியபோது வேள்விக்குடி என்னும் ஊர் பிராமணர்களுக்கு உரிமை உடையதாய் இருந்தது. சங்க காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்பவன், யாகங்கள் செய்வதற்குத் தனக்கு உதவிய பிராமணர்களுக்கு வேள்விக்குடி என்னும் ஊரைப் பிரம்மதேயமாக வழங்கியிருந்தான். அவன் காலம் முதல் பிராமணர்கள் இந்த ஊரின் உரிமையை வரி எதுவும் செலுத்தாமல் அனுபவித்து வந்தனர். களப்பரன் மதுரையைக் கைப்பற்றியதும், பிராமணர்களிடமிருந்து பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி அவர்களுக்கு வழங்கியிருந்த வேள்விக்குடி என்னும் ஊரையும் கைப்பற்றிக் கொண்டான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. இவன் சமண சமயத்தைச் சார்ந்தவன் என்றும், சைவ அடியார்கள் சிவபெருமானுக்குச் செய்யும் திருப்பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தான் என்றும் கல்லாடம் குறிப்பிடுகிறது.

 • அச்சுதக் களப்பாளன்

 • தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல் அச்சுதக் களப்பாளன் என்ற பெயருடைய களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தினான் என்று இந்நூல் கூறுகிறது. இவனைப் பற்றிய பாடல்கள் சில யாப்பருங்கலக் காரிகை உரையிலும், யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம்பெறுகின்றன. அச்சுதன் என்பது சமணசமயக் கடவுளுக்கு உரிய பெயராகும். எனவே அச்சுதக் களப்பாளன் சமணசமயம் சார்ந்தவன் எனலாம்.

 • அச்சுத விக்கிரந்தன்

 • புத்ததத்தர் என்பவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த பௌத்த மதப் பெரியார் ஆவார். இவர் பாலிமொழியில் அபிதம்மாவதாரம் என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் இவர் தம்முடைய காலத்தில் அச்சுத விக்கிரந்தன் என்னும் களப்பிர அரசன் காவிரிப்பட்டினத்திலிருந்து (புகாரிலிருந்து) சோழ நாட்டை ஆண்டு வந்தான் எனக் குறிப்பிடுகிறார்.

 • கூற்றுவ நாயனார்

 • நம்பியாண்டார் நம்பி என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சுருக்கமாகத் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலில் பாடியுள்ளார். அவர்களுள் ஒருவர் கூற்றுவ நாயனார் என்பவர் ஆவார். இவர் களப்பிர அரசன் என்பதை நம்பியாண்டார் நம்பி,
  ஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒருகோலின் வைத்தான்
  கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே
  (திருத்தொண்டர் திருவந்தாதி, 47:3-4)
  என்ற அடிகளில் குறித்துள்ளார்.
  (ஓதம் – கடல்; தழுவிய – சூழ்ந்த; ஞாலம் – உலகம்; கோல் – செங்கோல்)
  சேக்கிழார் பெரியபுராணத்தில் கூற்றுவ நாயனாரின் வரலாற்றை விரிவாகப் பாடியுள்ளார். கூற்றுவ நாயனார் பகையரசர் பலரை வென்று முடிசூடிக் கொள்ள விரும்பித் தில்லை வாழ் அந்தணரை வேண்டினார். இவர் சோழர் குலத்தைச் சார்ந்தவர் அல்லர் என்பதால் தில்லைவாழ் அந்தணர் இவருக்கு முடிசூட்ட மறுத்து விட்டனர். பின்பு இவர் சிவபெருமானைத் தனக்கு முடிசூட்டுமாறு வேண்டினார். சிவபெருமானும் தமது திருவடியை இவருக்கு முடியாகச் சூட்டி அருளினார். இவ்வாறு சேக்கிழார் கூற்றுவ நாயனார் வரலாற்றைக் கூறுகிறார்.
  1.4. களப்பிரர் வீழ்ச்சி
  களப்பிரர்கள் தமிழ் நாட்டில் பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் ஆண்டு வந்த காலத்தில், தொண்டை மண்டலத்தைப் பல்லவர்கள் ஆண்டு வந்தனர். இப்பல்லவர்களை முற்காலப் பல்லவர்கள் (கி.பி. 250-550) என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களுள் பப்பதேவன், சிம்மவர்மன், சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் ஆகிய சிலருடைய வரலாறு மட்டும் ஓரளவு அறியப்படுகிறது. முற்காலப் பல்லவர்களுக்கும், களப்பிரர்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்றனவா என்பதை அறிய முடியவில்லை.
  கி.பி. 575இல் கடுங்கோன் என்ற பாண்டியன், பேராற்றல் படைத்த பெருவீரர்களுடன் வந்து, அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு வந்த களப்பிர அரசனைப் போரில் வென்று, தன் நாட்டைக் கைப்பற்றி, மதுரையில் வீற்றிருந்து அரசாளத் தொடங்கினான். இதனை வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுகிறது. ஏறத்தாழ இதே காலத்தில் சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னன் (கி.பி 575-615) களப்பிரர்களை வென்று, அவர்களின் ஆட்சியின்கீழ் இருந்த சோழ நாட்டினைக் கைப்பற்றிப் பல்லவர் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் என்று வேலூர்ப் பாளையம் செப்பேடுகள் கூறுகின்றன.
  பாண்டியராலும், பல்லவராலும் வீழ்ச்சியடைந்த களப்பிரர் கி.பி ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்களாக முத்தரையர் என்ற பெயரில் தஞ்சாவூர், செந்தலை, கொடும்பாளுர் என்ற ஊர்களில் இருந்து ஆட்சி புரியலானார்கள். இம்முத்தரையர் சிலபோது பல்லவர்களுக்கும், சிலபோது பாண்டியர்களுக்கும் போர்த்துணைவர்களாக இருந்து வந்தனர்.
   களப்பிரர் காலச் சமுதாய நிலை
  சங்க காலச் சமுதாயத்திற்கும் களப்பிரர்கள் காலச் சமுதாயத்திற்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுவாகக் களப்பிரர்கள் ஆட்சியில் சமுதாய அமைதி குலைந்தது. கொள்ளையும், கொலையும் மலிந்தன. அறம் மறைந்துவிட்டது. தமிழ் நாட்டைச் சாராத களப்பிரர்கள் தமிழ்ப் பண்பாட்டை அழிக்கத் தலைப்பட்டனர். மன்னர்களையும், நாட்டையும் புகழ்ந்து பாடும் சங்க காலத்து வழக்கம் மறைந்தது. கடல் கடந்த வாணிகம் தடைப்பட்டது. சீர் குலைந்த சமுதாயத்தைச் சீர்படுத்துவதற்கு அறிஞர் பெருமக்கள் முற்பட்டனர்.
  அதே சமயத்தில் களப்பிரர்கள் பொருளாதாரத்தில் சமத்துவம் ஏற்படுவதற்கு முற்படலாயினர். அவர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி மதுரையை ஆளத் தொடங்கிய காலத்தில் பிராமணர்கள் பிரம்மதேயமாகச் (வரியில்லா ஊராக) சில ஊர்களைப் பெற்றிருந்தனர். வேள்விக்குடி என்னும் ஊர் அவற்றுள் ஒன்றாகும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அவர்களிடமிருந்து அவ்வூர்களைக் களப்பரன் என்னும் அரசன் பறிமுதல் செய்தான்.
  இந்தக் காலக்கட்டத்தில் சமணமும், பௌத்தமும் பிறப்பால் மக்களிடையில் ஏற்றத்தாழ்வு இல்லை எனப் போதித்துக் கொண்டிருந்தன.
  களப்பிரர் காலச் சமய நிலை
  களப்பிரர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் பௌத்தமும், பாண்டிய நாட்டில் சமணமும் உயர்வடைந்திருந்தன. நாகப்பட்டினம், பூம்புகார், உறையூர், பூதமங்கலம் ஆகிய இடங்களில் பௌத்த விகாரங்கள் கட்டப்பட்டிருந்தன. அவை சமயத் தொண்டும், சமுதாயத் தொண்டும், கல்விப் பணியும் ஆற்றி வந்தன. காஞ்சிபுரம் பௌத்த சமயத்திற்குப் பெயர் பெற்று விளங்கியது. தத்துவ ஆய்வு அங்கு நடைபெற்றது.
  சமணமும் இக்காலத்தில் படிப்படியாக வளர்ந்து வந்தது. மதுரையில் நிறுவப்பட்ட திராவிட சங்கம் சமணக் கொள்கையைப் பரப்பி வந்தது. சமண ஆசிரியர்களான சமாந்தபத்திரன், சர்வநந்தி ஆகியோர் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர். சமணப் பள்ளிகள் பல எழுப்பப்பட்டன. அருகனைச் சமணர்கள் கடவுளாக வணங்கினர். வைதிக சமயக் கருத்துகள் சிலவற்றை இவர்கள் ஏற்றுக் கொண்டனர். வாசுதேவன், பலதேவன் ஆகியோரைக் கடவுளாகக் கருதினர்.
  இருண்ட காலத்தில் வைதீகம், சைவம், பிரமவாதம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம் முதலிய வேறு சமயங்களும் நிலவி வந்தன. இவற்றுள் சைவ சமயக் கொள்கைகள் நாடு எங்கிலும் பரவியிருந்தன. ஆலயங்கள் பல எழுப்பப்பட்டிருந்தன. சிவ வழிபாடும் நடைபெற்றது.
  சமயங்கள் பல நடைமுறையில் இருந்தாலும் சமயச் சண்டைகள் நிகழவில்லை. களப்பிரர் காலத்தில் வாழ்ந்த திருமூலர், காரைக்கால அம்மையார் ஆகிய சைவ நாயன்மார் பாடிய நூல்களிலும், முதல் ஆழ்வார்கள் பாடிய திருவந்தாதி நூல்களிலும் சமண சமயத்தையோ, பௌத்த சமயத்தையோ பழித்துப் பேசும் எந்த ஒரு பாடலும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
  சமயக் கருத்து வேறுபாடுகளைப் பட்டி மண்டபங்களில் சொற்போர் நடத்தித் தீர்த்துக் கொண்டனர். இதனை மணிமேகலை அறிவிக்கிறது.
  களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி
  களப்பிரர் சமண சமயத்தையும், பௌத்த சமயத்தையும் சார்ந்தவர்களாக இருந்தனர். சமண சமயம் சார்ந்தவர்கள் பிராகிருத மொழியையும், பௌத்த சமயம் சார்ந்தவர்கள் பாலி மொழியையும் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். எனவே இவர்களது ஆட்சிக் காலத்தில் பிராகிருத மொழிக்கும், பாலி மொழிக்கும் உயர்ந்த செல்வாக்குக் கிடைத்தது. மேலும் இவ்விரு மொழிகளும் ஆட்சி மொழிகளாகத் திகழ்ந்தன. சங்க காலத்தில் ஆட்சி மொழியாக இருந்த தமிழ் மொழி, களப்பிரர் காலத்தில் ஆட்சி மொழியாக இல்லாவிட்டாலும் சமயத்தையும், தத்துவத்தையும், ஒழுக்கத்தையும் பொதுமக்களுக்குப் புகட்டும் ஓர் உயர்ந்த நிலைமையை எய்தியது. தமிழில் போதித்தாலொழியத் தத்தம் சமயங்களின் கருத்துகளைப் பொதுமக்களுக்குப் புகட்ட முடியாது எனக் கருதிய சமணரும், பௌத்தரும் தமிழைக் கற்கலானார்கள். நல்ல பல நூல்களைத் தமிழில் எழுதலானார்கள்.
  பூச்சியபாதர் என்ற சமண முனிவரின் மாணவராகிய வச்சிரநந்தி என்பவர் மதுரையில் திராவிட சங்கம் என்ற ஒரு சங்கத்தைக் கி.பி. 470இல் நிறுவினார். இதனை நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கூறுவர். இச்சங்கத்தின் நோக்கம் சமண சமய அறங்களைப் பரப்புவதும், சமண சமயக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது.
  தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும் நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி நீதி நூல்களும், பக்தி இலக்கியமும் முதலில் தோன்றியது களப்பிரர் காலத்திலேயே ஆகும். சங்க காலத்தில் ஆசிரியப்பாவும், கலிப்பாவும் செல்வாக்குப் பெற்றிருக்க, களப்பிரர் காலத்தில் வெண்பா செல்வாக்குப் பெற்றது.
  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை, ஆகிய ஒன்பது நீதி நூல்களும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு அகப்பொருள் நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறப்பொருள் நூலும் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள திருக்குறள் சங்க காலத்தில் தோன்றியது; நாலடியார் களப்பிரர் காலத்திற்குப் பின்பு தோன்றியது.)
  அறுபத்து மூன்று சைவ சமய நாயன்மார்களில் காலத்தால் முற்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் திருமூலர், காரைக்கால் அம்மையார் ஆகிய இருவரும் ஆவர். இவர்கள் இருவரும் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமூலர் திருமந்திரம் என்ற ஒப்பற்ற நூலை எழுதினார். காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திரு இரட்டை மணிமாலை என்னும் நூல்களை எழுதினார். சைவ சமய நாயன்மார்கள் பாடிய நூல்கள் பிற்காலத்தில் பன்னிரு திருமுறையாகத் தொகுக்கப்பட்டன பன்னிரு திருமுறையில் திருமந்திரம் பத்தாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. காரைக்கால் அம்மையார் நூல்கள் பதினொன்றாம் திருமுறையில் வைத்துத் தொகுக்கப்பட்டன.
  பன்னிரு ஆழ்வார்களில் காலத்தால் முற்பட்டவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவர் ஆவர். இவர்கள் முதலாழ்வார்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுவர். இவர்களும் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் திருமால் மீது நூறு பாடல்கள் கொண்ட திருவந்தாதி என்னும் பெயருடைய நூலைப் பாடினர்.
  களப்பிரர் காலத்தில் தோன்றிய மற்றொரு நூல் முத்தொள்ளாயிரம் ஆகும். இந்நூல் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் நூல் ஆகும்.
  மேலே குறிப்பிட்ட களப்பிரர் கால இலக்கிய நூல்களைப் பற்றி இலக்கிய வரலாறு என்ற தாளில் விரிவாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.  1 கருத்து: