மறையூர்
தென்காசி நாதர் கோயில் பாறைக்கல்வெட்டு
1.ஸ்வஸ்திஸ்ரீ
மலைமிசை நாட்டு மரவூர் திருநாஞ்சியப்பற்கு
2.ஸ்வஸ்திஸ்ரீ
மேல்வகை நாட்டில்
3.காரையாற்றில்
பிள்ளையான்
4.இராசாக்கணாயனான
மலை
5.கொண்ட
தேச ந த தை கொ
6.ண்ட
கண்டன் வுச்சிநாராயணதேவன்
7.வைப்பித்த
திருத்தோப்பு ......
8.ப
பொ என்னை வளக்க பெரு
9.மாள்
நாயனங்ககாறன் வ ....
10.இந்தத்தோப்பு
ரக்ஷிப்பானொருவன் திரு
நா .. .. .... பல
11.(நி)வந்தக(ளு)க்கும்
கறியமுது நடத்திநின்ற ..... ...... போகவும்
உடுமலை-மூணாறு பாதையில் கேரளப்பகுதியில்
அமைந்துள்ளது மறையூர். இங்குள்ள தென்காசி நாதர் சிவன் கோயிலில் ஒரு
பாறைக்கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டை ஆய்வு செய்ததில் தெரியவரும் செய்திகளை இங்கு
பார்ப்போம். இக்கல்வெட்டு ஒரு சரிவான பெரிய பாறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது.
பாறை, கல்வெட்டு வரிகள் முழுதும்
மறைக்கப்படாமல் தெரியுமாறு, சுவரோடு சுவராகப் பதிக்கப்பெற்றுள்ளது.
வரிகளைப்பிரிக்கும் வகையில் கிடைக்கோடுகள் (
Horizontal Lines) செதுக்கப்பட்டு,
அக்கோடுகளுக்கிடையில் எழுத்துகள் அழகாகப்பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகள் சற்றே
பெரிதாகவும் காணப்படுகின்றன.
கல்வெட்டின் இரு புறமும்
வணிகக்கல்வெட்டுக்கே உரிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. விளக்கின்
அடிப்பீடத்தைப்போன்ற வடிவமும்,அதற்குமேல் தண்டுப்பகுதியும்,உச்சியில் சூலம் போன்ற
பகுதியும் செதுக்கப்பட்டுள்ளன. இது புறச்சான்று. அகச்சான்றாக, கல்வெட்டு வரிகளில்
“அங்ககாறன்” என்னும் சொற்றொடர்
வருகின்றது. நானாதேசிகள்,பதினெண்விஷயத்தார்(பதினெண்பூமியார்),ஐநூற்றுவர் ஆகிய பல
வணிகர் குழுக்கள் தென்னாடு முழுவதும் இயங்கி வந்துள்ளன. இவ்வணிகர் குழுக்கள்
எல்லாவற்றுக்கும் பொது மையமாக நிர்வாகச்சபை இருந்த இடம் கருநாடகப்பகுதியில் அய்ஹொளெ என்னும் பகுதியாகும்.
தமிழ்க்கல்வெட்டுகளில் இது ஐயப்பொழில்,அய்யம்பொழில் என்று பலவாறாக
அழைக்கப்படுகிறது. அய்ஹொளெ வணிகர் சபை, ஆங்கிலத்தில் Guild of
Merchants என்பதற்கொப்பான
ஒரு மையச்சபையாகும். தமிழ்க்கல்வெட்டுகளில் இச்சபை “சமையம்”, “சமையத்தார்” என்னும் தொடர்களால் குறிக்கப்படுகிறது.
இச்சபையே, நிவந்தங்கள்,கொடைகள் ஆகியன குறித்து ஆணைகளைப்பிறப்பிக்கும். இந்த
ஆணைகள், “சமையக்கணக்கர்”களால்
எழுதப்பட்டன.
மேற்சொன்ன வணிகர் குழுக்களில் வீர பணஞ்சியர், கவறையர்,அங்ககாறர் ஆகிய
பிரிவினர் இருந்தனர் என்பது கருநாடகப்பகுதியில் உள்ள கன்னடக்கல்வெட்டுகளிலும்,
தமிழ்க்கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது. சான்றாக,
சாம்ராஜ் நகர் பகுதியில் கெம்பனபுரம் ஊர் தமிழ்க்கல்வெட்டில், கவறையீசுவரமுடையார்
கோயிலுக்கு விளக்கெரிக்கக் கொடை அளித்துள்ள செய்தி காணப்படுகிறது.
கல்வெட்டின் இறுதியில், ஓம்படைக்கிளவி என்னும் பகுதியில், இந்த
தர்மத்தைக்காப்பவன் புண்ணிய பலனைப்பெறுவான் எனக்குறிப்பது வழக்கம். அது போலவே,
இக்கல்வெட்டிலும் வருவதைப்பார்க்கிறோம். “இந்தத்தோப்பு ரக்ஷிப்பானொருவன்” என்பது கல்வெட்டுத்தொடராகும்.
கல்வெட்டின்
காலத்தைக்கணிக்கப் போதுமான சான்று இல்லை. காரணம், கல்வெட்டுப்பாடத்தில் அரசர்களின்
பெயர்களோ, கலியுக ஆண்டு, சாலிவாகன ஆண்டு ஆகியவற்றின் குறிப்புகளோ காணப்படவில்லை.
எனினும், கல்வெட்டின் எழுத்தமைதியைக்கொண்டு, இக்கல்வெட்டின் காலம் கி.பி. 14-ஆம்
நூற்றாண்டுக்குப்பிந்தையதாகலாம் எனக்கருத இடமுண்டு.
முடிவாக, மேற்குறித்த செய்திகள், கல்வெட்டின்
முதலாய்வு மூலம் தெரியவருகின்றவையாகும். இச்செய்திகளை உறுதிப்படுத்தவும்,
தெளிவாகத்தெரியாத பகுதிகளில் உள்ளவற்றை
வெளிக்கொணரவும் இக்கல்வெட்டு மீளாய்வு செய்யப்படவேண்டும்.
து.சுந்தரம்,கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
1 கருத்துகள்
Amazing analysis. Regards to you, to your involvement and efforts.
பதிலளிநீக்கு