சங்க இலக்கியத்தில் நுண்கலைகள்




சங்க இலக்கியத்தில் நுண்கலைகள்
                  ரா. பூங்குன்றன்  
உதவி இயக்குநர் (ஓய்வு)  
தொல்லியல் துறை, சென்னை - 8
மனிதன் சிந்திக்க தொடங்கி சில காலம் கழிந்த நிலையில் கலை அழகில் ஈடுபாடுகாட்டினான். பின் பழைய கற்காலத்திலும் புதிய கற்காலத்திலும் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் உருவாயிற்று. அப்போது கழுத்தணி, காலணி, இடுப்பணி ஆகியவற்றை உடன் வைத்துப் புதைக்கும் வழக்கம் உருவாயிற்று. மாராட்டியத்தில் புதிய கற்கால ஈமச்சின்னத்தில் குழந்தையின் சவத்தோடு செம்பு மணிகள் 17, பட்டு நூலில் கோர்க்கப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப் பெற்றது1. மேலும் கனிமக்கற்களால் செய்யப்பெற்ற மணிகளும் கழுத்து அணியாக விளங்கியுள்ளது. தமிழகத்தில் பெருங்கற் சின்னங்களில் (ஈமச்சின்னம்) நிறைய மணிகளைக் கண்டெடுத்துள்ளனர்.

சிந்து வெளி நுண்கலைகள்
சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரிகம் என்று கூறப்பெறுகின்றது. அண்மைக் காலங்களில் இக்கருத்து வலிவுபெற்று வருவதைப் பார்க்கலாம். அந்த அடிப்படையில் நோக்கும்போது சிந்து சமவெளியில் கிடைக்கும் நுண்கலைப் பொருட்கள் தமிழர் நுண்கலைப் பொருட்கள் எனலாம். சிந்து வெளியில் அழகு மணிகல் செய்யும் தொழிற் கூடங்கள் மிகுந்திருந்தன. இங்கு உற்பத்தி செய்யப் பெற்ற ஊதாநிறக்கல் மணிகண் (Lapis Lazhli) மெசபடேமியாவில் மக்களும் அரசர்களும் விரும்பும் மணிகளாக விளங்கின. அரசன் இறக்கும்போது அவனுடன் வைத்துப் புதைக்கும் மதிப்புமிகு (prestigious good) பொருள் என்று அழைக்கப்பெறுகின்றது. ஆய்மன்னன் அளித்த கலிங்கம்வைரம், பொன், முத்து ஆகியவை, முசிறிப் படிமம், மாந்தை நகரத்தில் நிலந்தினக்கிடந்த வைரம், பொற்குவை ஆகியவை மதிப்புமிகு பொருட்கள் வகையைச் சேரும். சிந்து சமவெளியில் பழுப்புநிறக்கல், பளிங்குக்கல், பிறகற்கள்ஆகியவற்றால் அழகு மணிகள் செய்யப்பெற்றன. இந்த மணிகளின் மூலம் கிடைத்த வருவாய் சிந்து வெளி நகரங்களை வளப்படுத்தின. மேலும் பொன் அணிகலன்கள், நீலநிறக்கல்லால் செய்யப்பெற்ற அணிகலன்கள் போன்ற அணிகலன்கள் சிந்து சமவெளி வாழ்விடங்களில் கிடைத்துள்ளன. இந்தப் பொருட்கள் தமிழரின் நுண் கலை வல்லமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள்2.

தமிழ் இலக்கியத்தில் நுண்கலைப் பொருட்கள் பற்றிய செய்திகள் மிகுந்து கிடைக்கின்றன. வளை, மணிகள் கோத்த ஆரங்கள், மணிகள் கோத்த மேகலை, சிலம்பு, போன்ற கலைப்பொருட்கள் நுண்கலைப் பிரிவில் அடக்கலாம். சங்க இலக்கியத்தில் போகிற போக்கில் உவமைகளாகவும், உருவகங்களாகவும் கூறப்பெறும்போது இத்தகைய நுண்கலைப் பொருட்கள் குறிக்கப்பெறுகின்றன.

மணி செய்யும் தொழில்
சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய தொழில்களில் மணிகள் செய்தல் குறிப்பிடத்தக்கதாகும். பெருங்கறபடைச் சின்னங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எண்ணற்ற மணிகளை இதற்குச் சான்றாகக் காட்டலாம். அரிய மணிக்கற்கள் நிலவியலில் ஏற்பட்ட எண்ணற்ற வேதியியல், இயற்பியல் காரணமாகப் பாறைகளுக்கு இடையே தோன்றுபவையாகும். இவ்வகைப் பாறைகள் தொடர்பான ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தால் மட்டுமே அவற்றின் இருப்பிடமறிந்து கண்டெடுத்து மணிகள் செய்ய இயலும். எனவே அரிய மணிகள் விளையுமிடம் அறிந்து அவற்றை வாழ்வியலுக்குப் பயன்படுத்தும் நிலை முதல் நிலை ஆகும். இரண்டாவது, இவ்வரிய கல்மணிகள் ஒவ்வொன்றும் சில இயற்பியல் வேதியியல் கூறுகள் கொண்டவை. இத்தன்மையை ஒருவர் அறிந்திருந்தால் மட்டுமே அவற்றை ஆபரணப்பொருட்களாக மாற்ற இயலும். எனவே அரிய மணிகள் பற்றிய அறிவியல் சார்ந்த பின்புலம் (Gemmology) தேவை. மூன்றாவது நிலை என்பது இவற்றை வணிகத்திற்குப் பயன்படுத்தும் வகையில் தொழில் நுட்பத்தைக் கொண்டு வடிவமைப்பது ஆகும். இவற்றைச் சங்காலத் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது குறிப்பாகக் கொடுமணல் அகழாய்வு மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது3.
சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ள மணி, காசு, காணம் என்ற சொற்களின் பின்புலத்தை அறியாமலேயே சில இடங்களில் இச்சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளன.
மணி  என்ற சொல் நூலில் மாலையாகக் கோத்து அணிந்து கொள்ளும் அணிகலன் என்ற நிலையிலேயே பெரும்பாலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல் சங்க இலக்கியத்தில் 381 இடங்களில் பயின்று வருகின்றது. அவ்விடங்களில் இயற்கையாகக் கிடைக்கும் கற்களையே இது குறித்து வருகின்றது.  புறம் 202ஆம் பாட்டில் கலைமான் ஒன்று ஓடுகின்றபொழுது அதன் குளம்படிபட்டு மணிகள் தெறித்து மிளிர்வதாகக் குறிப்பிடப்படுகிறது. பதிற்றுப்பத்து (21:20-23) சேரமன்னனுக்குச் சொந்தமான செருப்பு மலையில் கோவலர்கள் மிளிரும் கதிர்மணிகளைப் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இன்றும் காங்கயத்திற்கு வடமேற்கே ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ள சிவன்மலை, பெருமாள்மலை ஆகிய மலைகளில் மணிகளை மக்கள் சேகரித்து வருகின்றனர் என்பதை ஈண்டு குறிப்பிடத்தக்கது4. அதேபோன்று உழவர்கள் நிலத்தை உழுகின்ற பொழுது உழுசாலில் திருமணிகள் கிடைப்பதாகப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. இன்றும் அத்தகைய மணிகள் கொடுமணலைச் சுற்றியுள்ள ஊர்ப் பகுதிகளில் கிடைப்பது சங்கப் பாடலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றது. மணிகள் கிடைக்கும் பாறைகளைப் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது. பொதுவாக இவை பளிங்குக் கற்களுக்கிடையே அதிகமாகக் கிடைக்கும். இதையே நற்றிணையும் (243:3) ஐங்குறுநூறும் (233:2-4) வான் பளிங்குக்கு இடையே திருமணிகள் கிடைப்பதாகக் குறிப்பிடுகின்றன. கொல்லிமலை மீது மாலை நேரத்துச் செங்கதிரோன் படுவதால் அம்மலையின் கண் உள்ள மணிகள் இமைப்பதாக அகநானூற்றுப் பாடல் (213:11-15) குறிப்பிடுகிறது. மேலும் மலை நிலத்து மக்களான கானவர்கள் கிழங்கிற்காகத் தோண்டும் பொழுது மணிகள் வெளிப்படுவதாகக் குறுந்தொகைப் பாடல் (379:1-3) ஒன்று சுட்டுகிறது. அதேபோன்று யானைத்தந்தத்தை கொண்டு நிலத்தைத் தோண்டி மணிகள் எடுத்ததாக அகப்பாடல் (282:1-10) ஒன்று தெரிவிக்கிறது. மேற்கூறிய மணிகள் தொடர்பான குறிப்புகள் அனைத்தும் இவை இயற்கையாகக் கிடைப்பதையே வலியுறுத்துகின்றன. இவற்றை நூலில் கோத்து மாலையாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடவில்லை. எனவே மணி என்ற சொல் சங்ககாலத்தில் இயற்கையாகக் கிடைக்கும் அரிய கல்மணியையே குறிக்கிறது எனலாம். கொடுமணலுக்கு அருகில் அறச்சலூர் மலையில் கிடைத்த கி.பி.இரண்டாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் எழுதப்பட்ட தமிழ்ப் பிராமிக்கல்வெட்டில் வரும் வண்ணக்கன் மணிகளைச்  சோதிக்கும் நிபுணனாக இருந்திருக்கலாம். இதே போன்று இவ்வரிய மணிகளைத் துளையிடும் வல்லுநரைத் திருமணிக்குயிலுனர் என மதுரைக்காஞ்சி (511) குறிப்பிடுகின்றது. இவ்வரிய மணிகள் மண்டைகளில்  (bowl) வைக்கப்படுவதை மணிசெய் மண்டை என அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது (அகம்: 105:5) பட்டினப்பாலை சில மணிகள் வடக்கிலிருந்து வந்ததை வடமலைப் பிறந்த மணி எனக் குறிப்பிடுகிறது. சங்க காலத்தில் குஜராத்திலிருந்து மணிகள் கொண்டுவரப்பெற்றதையே இது குறித்தது. கொடுமணலில் கிடைத்த வைடூரியம் (Lapis lauzli) சூது பவளம் (carnelian beads), அகேட் (agate) போன்றவை ஆப்கானிஸ்தானத்திலும், வடநாட்டில் மட்டுமே கிடைப்பவை. குறிப்பாக சூதுபவளம் குஜராத் மற்றும் மகாராட்டிர மாநிலத்தில்இவ்வரிய கற்கள் கிடைத்தன. அங்கிருந்து கொண்டுவரப்பட்டு மணிகளாக்கி ஏற்றுமதி செய்யப்பட்டன. மேற்கூறிய அனைத்துச் செய்திகளும், குறிப்புகளும், சான்றுகளும் மணி என்ற சொல் சங்க இலக்கியத்தில் இயற்கையாகக் கிடைக்கும் கல் என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகின்றன5.
மணி என்பது அரிய கல் என்ற பொருளில் பயன்படுத் தப்பட்டிருந்தால் நூலில் கோத்து மாலையாக அணியும் அணிகலன்களுக்கு காசு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இக்காசு என்ற சொல் சங்க இலக்கியத்தில் 13 இடங்களில் பயின்று வருகிறது. அகநானூறு (315:12) பளிங்கினால் செய்யப்பட்ட காசுகள் (quartz beads) ஒரு நூலில் கோக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறது. மேலும் மணிக்கற்களால் காசு (மீனீவீ ஜீக்ஷீமீவீஷீ ஷீஸீமீ தீமீணீபீ) செய்யப்பட்டதை மணிக்காசு என்ற சொற்றொடர் பயன்படுத்தப் பெற்றுள்ளது. இது மணி மற்றும் காசு என்ற இரு சொற்களால் உருவானது. இரண்டும் ஒரே பொருளைத்தரும்பட்சத்தில் இவ்விரு சொற்களையும் பயன்படுத்தத் தேவையில்லை. மணி என்பது அரிய கற்களையும் (gems stone), காசு என்பது நூலில் கோத்து அணியத்தக்க அமைப்பினையும் (beads) குறித்து நின்றதால் அரிய கல்மணிகளால் செய்த ஆபரணத்தை மணிக்காசு என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. இதேபோன்று பளிங்குக் காசு என்ற சொல் பளிங்குக் கற்களால் (quartz) செய்யப்பட்ட காசு என்று பொருள்படும்6.

பொற்கொல்லர் கையால் பிடித்துக் கொண்டு காசின் ஊடே நூல் செலுத்துவது கிளியின் அலகில் வேப்பம் பழம் இருப்பதற்கு ஒப்பானதாகக் குறுந்தொகை குறிப்பிடுகிறது. (குறுந்தொகை 148:3). கொன்றைப்பூ மஞ்சள் நிறத்தில உருண்டை வடிவில் இருப்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இக்காசுகளில் சிறிய பரல்கள் இடப்பட்டு ஓசை எழுப்பப்படுவது கிண்கிணி என்று குறிப்பிடப்படுகிறது (புறநானூறு 198:5)  கால் பெயல் அல்குல் காசு (நற்றிணை 66:9); பொலம் பசும் பாண்டிற்காசு நிறை அல்குல் பொலம் பல்காசு அணிந்த அல்குல் போன்ற சொற்றொடர்கள் பொன்னால் செய்யப்பட்ட காசுகள் இடையில் அணியப்பட்டதைத் தெரிவிக்கின்றன. எனவே காசு என்ற சொல் சங்க இலக்கியத்தில் கையாளப்பட்ட இடத்தையும் அமைப்பையும் பார்க்கும்பொழுது இவை நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் சிஷீவீஸீ என்ற பொருளில் பயன்படுத்தப்படாமல் துளையிடப்பட்ட அணியேனாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதுவரை தமிழகத்தில் கிடைத்துள்ள காசுகள் அனைத்தும் சதுரமாகவும், வட்டமாகவும், தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறிப்புடனும், மீன், யானை, வில், அம்பு, மலை, ஆறு முதலிய உருவங்களுடனும்  போன்ற சின்னங்களுடனும் காணப்படுகின்றன. எனவே சங்க இலக்கியத்தில் காசு என்பது நாம் நினைப்பதுபோல் இன்றைய காசு என்ற பொருளில் குறிக்கவில்லை7. கொடுமணம் பட்ட... வினைமாண் நன்கலம் (பதிற்று 67) என்று கபிலரும் கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் என்று (பதிற்று 74) அரிசில் கிழாரும், சங்ககால ஊரான கொடுமணலில் செய்யப்பட்ட விலையுயர்ந்த மணிகளைப்பற்றிப் பேசும் பதிற்றுப்பத்துப் பாடல் வரிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த எண்ணற்ற மணிகள் சான்றுகளாக உள்ளன. சங்க காலத்தில் மணிக்கற்கள் கொண்டு ஆபரணங்கள் செய்யும் தொழில் நுட்பத்தில் தமிழர்கள் சிறப்புற்று விளங்கியிருந்தனர் என்பதை இச்செய்திகளால் உணரலாம்.

கொடுமணலில் இரும்புத் தொழிலைப் போன்றே அரிய கற்களைக் கொண்டு மணிகள் செய்யும் தொழில் கூடங்களும் சிறந்து விளங்கியுள்ளது. இதைச் சங்கப்பாடல்களும் உறுதி செய்கின்றன. இப்பகுதியில் காணப்படும் ரோம நாட்டு வணிகத்தொடர்பைப் பார்க்கும்பொழுது இவை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. நிலப்பொதியியல் அமைப்பில் கொடுமணல் அரிய கற்கள் கிடைக்கும் காங்கயம் வட்டாரத்தில் அமைந்துள்ளது நீலக்கல் (ணீஜீலீவீக்ஷீமீ) கிடைக்கும் இடமாகிய சிவன்மலையும், பளிங்குக்கல் ஹீணீக்ஷீக்ஷ்  கிடைக்கும் வெங்கமேடு, அரசம்பாளையம் ஆகிய ஊர்கள் கொடுமணலைச் சுற்றியே அமைந்துள்ளன. இங்குப் பச்சைக்கல் நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், ஜேஸ்பர், அகேட், குருந்தம், வைடூரியம், மாவுக்கல் முதலிய அரியகற்களைக் கொண்டு மணிகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்து வந்துள்ளது. மேற்கூறியவற்றில் சூதுபவளம், அகேட் போன்ற மூலப் பொருட்கள் இந்தியாவின் பிறபகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டு இங்கு அணிகலன்களாக உருவாக்கப் பட்டுள்ளன. மணிகளில் முற்றுப்பெற்றவை, முற்றுப் பெறாதவை, மெருகேற்றப்பட்டவை, மெருகேற்றப் படாதவை, துளையிட்டவை, துளையிடப்படாதவை எனப் பலநிலைகளில் கிடைப்பதும், மூலப்பொருட்கள் கட்டிகளாகவும், சில்லுகளா கவும் கிடைப்பதும் மணிகள் கொடுமணலிலேயே தயாரிக்கப் பட்டன என்பதற்குச் சான்று பகர்வனவாக உள்ளன8. கொடுமணலில் வெண்கலத்தில் செய்யப்பெற்ற புலியின் உருவம் ஓர் ஈமச்சின்னத்தில் புதைக்கப்பெற்றிருக்கிறது. புலியின் வரிகள் காட்டப் பெற்றிருந்தன. அந்த வரிகளில் பெரில் என்ற கல்வகைப் பதிக்கப்பெற்றிருந்தது. புலியின் இரண்டு கண்களுக்கு சூது பவளக்கல் பதிக்கப்பெற்றிருந்தது9.
வேளில் (வெள்ளலூர்)
கோவைக்கருகில் உள்ள வெள்ளலூரில் பத்துக்கும் மேற்பட்ட பொன்கணையாழிகளும் விரற்கடை அளவுள்ள கார்னிலியன் கல்மணியும் கிடைத்தன. கார்னிலியன் கல்மணியில் மேயும் குதிரை வடிக்கப்பட்டுள்ளது. கணையாழி களில் புலி, மகரம் பபூன் தலை, தலைவாரும் உரோமானியப் பெண் உருவம் பொறித்த கல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஒருபுறம் யானை, மற்றொரு புறம் மாடு பொறித்த பொன் தாயத்து, காது குடையும் வெள்ளிக்கருவி, பொன் தாம்பாளம் ஆகியவை கிடைத்தன. இவை அனைத்தும் நம் நாட்டுக் கலைஞர்களின் கைத்திறனைக் காட்டுகின்றன10.
கருவூர்
இவ்வூரில் 1990-களிலிருந்து, வெள்ளி, பொன் ஆகியவற்றால் செய்யப்பெற்ற கணையாழிகள் மிகுதியும் கிடைத்துள்ளன. குதிரைவீரன் உருவுடைய கணையாழி, இருயானைகள் எதிரெதிரே நிற்கும் கணையாழி, கணவன் மனைவி உருவுடைய கணையாழி, யவன வீரன் நிற்கும் கணையாழி, யவனப்பெண் அம்மணமாக நிற்கும் கணையாழி, அப்போலோ உருவுடன் கூடிய கணையாழி, மாடு, பாயும் குதிரை, மகரம் ஆகிய உருவு பொறித்த கணையாழிகள் ஆகியவை பொன்னால் செய்யப்பெற்றவை. ஆகிய அணி இரண்டு குதிரைகள் பூட்டிய தேர்மீது அரசன் அரசி நிற்கும் கணையாழி ஒன்று கிடைத்துள்ளது11.
நாமமோதிரங்கள்
பெயர்பொறித்த கணையாழிகள் பத்துக்கும் மேல் கிடைத்துள்ளன. மன்னன், மேல்தட்டுமக்கள் ஆகியோர் பெயர் பொறித்த கணையாழிகள் பத்துக்கும் மேல் கிடைத்துள்ளன. தித்தன், குறவன், வேடுவன், பேரவதான், ஸாதன் ஸாதி வேஹி (ஸாத்தன் ஸாத்து வேள்) மிதிரன், உபாஅன் சாத்தன் நெல்வேட்டிச, வேளிய் சம்பன், அரிமான் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை வெள்ளி, பொன் போன்றவற்றால் செய்யப்பெற்றவை12.

பொருந்தல் நுண்கலைப் பொருட்கள்
சென்ற இரண்டு ஆண்டுகளில் பழனிக்கருகில் உள்ள பொருந்தல் என்ற ஊரில் அகழாய்வு செய்யப்பெற்றது. அவ்வூர் பண்டை நாளைய புலவர் பொருந்தில் இளங்கீரனார் என்பவர் வாழ்ந்தார். பொருந்தில் என்ற ஊர்ப் பெயரே இன்று பொருந்தல் என்று வழங்குகின்றது. இவ்வூர் அகழாய்வில் வெள்ளைக்கல், அகேட், கார்னீலியன், பளிங்குக்கல் போன்ற கற்களைக் கொண்டு மணிகளைச் செய்துள்ளனர். இங்குக் கண்ணாடி மணிகள் மிகுதியும் (2000) கிடைக்கின்றன13.
இந்த அகழாய்வில் மயில் உருவம் பொறித்த ஓடு ஒன்று கிடைத்தது. ஆவியர் கோமான் பேகன் நடுங்கிக்கொண்டிருந்த மயிலுக்கு போர்வை அளித்தான் என்ற செய்தி இந்த ஓட்டுப் பொறிப்போடு தொடர்புப் படுத்திப் பார்க்கலாம். இளங்கீரனார் பாடலில் மணிகள் பதித்த மாடம் என்று கூறுகின்ற செய்தி இவ்வூரில் மணிகள் நிறைய கிடைத்த தன்மையை உறுதிப்படுத்துகின்றன. மேலும் இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கண்ணாடி மணிகள் முசிறி துறைமுகத்து வழியாக யவன நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதை
உறுதிப்படுத்தும் சான்றுகள் முசிறி அகழாய்வில் கிடைத்துள்ளன.  அவை பொருந்துலிருந்து சென்ற கண்ணாடி மணிகள். முதிர் வார் இப்பி முத்த வார் மணல்

கதில் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை கடு மான் பொறைய  (புறம் - 53)

அகழாய்வில் கிடைக்கின்ற சான்றுகளும் இலக்கியத்தில் குறிக்கப்படுகின்ற சான்றுகளும் ஒப்பிடத்தக்க நிலையில் சங்ககால நகரத்தில் வாழ்ந்த மக்கள் நுன்கலைகளில் சிறப்புற்று இருந்தார்கள் என்பது உறுதிப்படுகின்றது.

பாடுசால் நன்கலன்கள்
சங்க இலக்யத்தில் பாடுசால் நன்கலன்14 என்றும், ஈகை அரியஇழை என்றும் கூறப்பெறுவது எடுத்துக் காட்டத்தக்கது. இச்சொற்றொடர்கள் மானிடவியலில் கூறப்பெறும் ஜீக்ஷீமீவீரீமீஷீ ரீஷீஷீபீ15 என்பதைக் குறிக்கும். பாடுசால் நன்கலன்கள் மனிதன் பசியைப் போக்குபவை அல்ல. ஆனால் அவற்றை வைத்திருப்பவன் பெருமைக்குரிய வனாகக் கருதப்பெற்றான். அதனால் அந்நாளைய வேந்தர்கள் தங்கள் பிணம் புதைக்கப்பெறும்போது இத்தகைய பொருட்களை உடன் புதைக்க ஏற்பாடு செய்தனர். ஒரு மன்னன் இறந்தபோது இத்தகைய பாடுசால் நன்கலன்கள் கையிருப்பில் இல்லை. அதனால் இறந்தவனின் மக்கள் படையெடுத்துச் சென்று அவற்றை வேறு மன்னனிடமிருந்து கவர்ந்து வந்து தங்கள் தந்தையின் ஈமச்சின்னத்தில் வைத்துப் புதைத்தனர்16. இதுபோல கொடுமணல் பெருங்கற் சின்னங்களில் ஆயிரக்கணக்கில் கார்னீலியன் மணிகளை வைத்துப்புதைத்தனர். ஒரு பெருங்கற்சின்னத்தில் 2500 மணிகள் ஒருசட்டியில் வைக்கப் பெற்றிருந்தன. இரண்டாவது பெருங்கற் சின்னத்தில் 1000 மணிகள் வைக்கப்பெற்றிருந்தன. மற்றொரு சின்னத்தில் 800 மணிகள் வைக்கப்பெற்றிருந்தன17. 1996ல் நடைபெற்ற அகழ்வில் ஒரு பெருங்கற் சின்னத்தில் 750 மணிகள் இருப்பது கண்டறியப்பெற்றது18. இவ்வாறு கார்னீலியன் மணிகள் மட்டுமே ஈமச்சின்னங்களில் வைக்கப்பெற்றிருந்தன. தோண்டப்பெற்ற எல்லா ஈமச்சின்னங்களிலும் இவைவைக்கப் பெறவில்லை. ஒருசில ஈமச்சின்னங்களில் மட்டுமே வைக்கப் பெற்றிருந்தன. இம்மணிக் கற்கள் குஜராத் பகுதியிலிருந்து கொண்டு வரப்பெற்றவை. வெகுதூரத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற பொருட்களே மதிப்புறு (றிக்ஷீமீவீரீவீஷீ ரீஷீஷீபீ) பொருள்களாகக் கருதப்பெற்றன.
அடிக்குறிப்புகள்

1. முனைவர் வீ. மாணிக்கம்
    தமிழர் வாழ்வியல் (கி.பி. 300 வரை)
    ப. 81

2. Shereen Ratna Gar
    Enquiries in to the Political Organization in Harappa Society P
3. க. ராஜன் தொல்லியல் நோக்கில் சங்ககாலம். ப. 117

4. மேதகு 5. பக். 117-118

6. ப. 119

7. மேதகு

8. ப. 121

9. க. ராஜன் கொடுமணல் அகழாய்வு, பக். 12-13
10. R. Nagasamy
        Roman Karur P.P. 43-47
11. Ebid
12. Ebid , ர. பூங்குன்றன்
    கரு ஊரின் இருப்பிடச் சிறப்பு
    புதிய ஆராய்ச்சி
13. Frontline - Oct 8, 2010, P.P. 64-75
14. சங்க இலக்கிய சொல்லடைவு தொகுதி III   
15. Shereen Ratna Gar
    Encounters Westerly Trade of Harappa Civilization (OUP) 1981 Edition P.P. 245-260
16. Ebid
  17.  க. ராஜன் கொடுமணல் அகழாய்வு பக். 20-23
18. கொடுமணல் அகழாய்வு துண்டுப் பிரசுரம் 1997 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்