குளித்தலை அருகே ராஜராஜசோழன் கோவில்: வரலாற்று கல்வெட்டுகள் கண்டெடுப்பு
Date: Oct 07 2010, Thursday
கரூர்: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவில், முதலாம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே மருதூர் காவிரி தென்கரையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014)ல் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில் கரூர் சேரர் அகழ்வைப்பக காப்பாட்சியர் நாக கணேசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காப்பாட்சியர் நாக கணேசன் வெளியிட்ட அறிக்கை: ஆயிரம் ஆண்டு கடந்த மேட்டு மருதூர் சிவன் கோவிலில் கருவறை, அர்த்தமண்டபம், கருங்களால் ஆன ஜகதி, பட்டி, குமுதவரி, கால் பிரஸ்தரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. விமானம் மட்டும் செங்கற்களால் அமைந்துள்ளது. கருவறையின் மூன்று பக்கமும் 22 தூண்களும், பிரஸ்தரத்தில் பூதகணங்கள் வரிசையாக அணிவகுப்பது போலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணின் மேலும் மனிதமுகம் குடைந்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கட்டுமானம், சுதை உருவம் சிதைந்துவிட்டதால் அவற்றின் விபரம் முழுமையாக தெரிந்து கொள்ளமுடியாத நிலையில் உள்ளது. கருவறை வெளிப்பக்கத்தில் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகிறது. கருவறைக்குள் பெரிய அளவில் ஆவுடையாரும், லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 10 தூண் கொண்ட அர்த்தமண்டபத்திலும், பல்வேறு சிற்ப வேலைப்பாடு உள்ளன. கோவில் முன் நந்தி, சேஷ்டாத்தேவி, விநாயகர் சிற்பம் காணப்படுகின்றது. நுழைவாயிலில் தென்புற நிலைக்காலில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு 21 வரிகளில் உள்ளது. அரசனின் 11வது ஆட்சிக்காலம் மூலம் இவ்வூர், கோவில் இறைவன், மன்னனை குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டில், "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என முதலாம் ராஜராஜனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கி.பி.996ல் கோவில் கட்டப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. கேரளாவிலுள்ள விழிஞம் கோட்டை, காந்தளூர்சாலை ஆகியவற்றை வெற்றிகொண்டதை நினைவு கூறும் வகையில், "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என்ற அடைமொழியுடன் மன்னன் குறிப்பிடப்பட்டார் என்பது தெரியவருகிறது.மேட்டு மருதூர், "மாதான மருதூர்' என்றும், இங்குள் ஈஸ்வரன் "ஆராவமிதீஸ்வரர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ பேரரசில் "மீய் கோட்டு' நாட்டில் அமைந்த சிற்றூராக மேட்டுமருதூர் இருந்துள்ளது. முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டு சிறப்புடன் விளங்கிய சிவன் கோவில் தற்போது முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மெத்தனத்தில் மாவட்ட நிர்வாகம்: ஆறா அமூதீஸ்வரர் சிவன்கோவில் ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பழமையான கோவிலாக உள்ளதை அறிந்த, கரூர் முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டார். இங்குள்ள பழமையான சிற்பங்களை பாதுகாக்கவும், கோவிலை புதுப்பிக்கவும், நகர புணர் அமைப்பு நிதியின் கீழ் 22 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்தார். நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்