ORIENTAL SCENERY .TAMILNADU













இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த 18ம் நூற்றாண்டு ஓவியர்களான தாமஸ் டேனியல் மற்றும் வில்லியம் டேனியல் ஆகியோரின்Aquatints என்னும் உலோகத்தில் படியெடுக்கப்பட்ட ஓவியங்கள்Aquatints என்பவை ஈயம் அல்லது தாமிரப் பட்டயங்கள் மீது அச்செடுக்கப்பட்ட ஓவியங்களாகும். Aqua என்றால் நீர். Tint என்றால் பிரதி அல்லது அச்சு என்று கண்காட்சியின் கையேட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த Aquatints என்னும் ஓவியங்களை உருவாக்க Camera Obscura என்னும் அதிபுத்திசாலித் தனமான சாதனத்தை உபயோகித்து இருக்கிறார்கள். இருவண்ணங்களில் நீர் ஓவியங்களைப் போன்ற சாயலில் பெரும் மலைகளையும் மலைக்க வைக்கும் கட்டடங்களையும் அதி தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள் இந்த இரு டேனியல்களும். Camera Obscura உபகரணத்தின் உதவியுடன் எடுக்கப்பட்ட படங்களின் மீது தைல வண்ணங்களையும் நீர் வண்ணங்களையும் குழைத்து ஒரு வகையான மஞ்சள், சிகப்பு மற்றும் பச்சை நிறங்களில் ஓவியமும் அல்லாது புகைப்படமாகவும் அல்லாது மிகப்பளிச்சென்று நிழலை நிஜமாக வடித்த Aquatint ஓவியங்கள் நம்மை 18ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கின்றன. இந்த இரு டேனியல்களும் 1786 துவங்கி 1794 வரை இந்தியா முழுக்கப் பயணித்து இருக்கிறார்கள். வில்லியம் டேனியலின் சித்தப்பா தாமஸ் டேனியல். வில்லியம் டேனியல் தன்னுடைய சிற்றப்பன் தாமஸ் டேனியலுடன் 1784ல் இந்தியாவுக்குப் பயணப்பட சித்தமானபோது இவருடைய வயது 16. இந்த இரு டேனியல்களும் இயற்கைக் காட்சிகளை தத்ரூபமாக வரையும் ஓவியர்களாக மட்டுமல்லாமல் ரசனை மிகுந்த பயணிகளாக, சாகசங்களை விரும்பி ஏற்கும் கலைஞர்களாக, கலையின் மீது அளவற்ற தாகம் நிறைந்தவர்களாகத் தங்கள் பயணங்களை அமைத்துக் கொண்டு இந்தியாவை வலம் வந்திருக்கிறார்கள். முகலாயர்களின் மாளிகைகள் மற்றும் திராவிட நாட்டின் பல முக்கியமான ஸ்தலங்களை தங்கள் ஓவியக் கண்களால் பதிவு செய்து கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பி இருக்கிறார்கள். வில்லியம் டேனியல் ஒரு டயரியில் குறிப்புக்களையும் கையோடு தைலம் மற்றும் நீர் ஓவியங்களாக தான் கண்ட அற்புதமான இயற்கைக் காட்சிகளையும் மாளிகைகளையும் ஆலயங்களையும் நீர் அருவிகளையும் பதிவு செய்து இங்கிலாந்து எடுத்துச் சென்றிருக்கிறார்.1794ல் லண்டன் திரும்பிய இரு டேனியல்களும் தாங்கள் இந்தியாவில் பதிவு செய்த ஓவியங்களை Camera Obscura கருவியின் துணையுடன் சுமார் 144 Aquatint களை உருவாக்கி அவற்றை Oriental Scenery என்னும் தலைப்பில் ஆறு வால்யூம்களாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த 144 Aquatint ஓவியங்களும் இந்தியாவின் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தின் கட்டிடக் கலை, ஓவியம் ஆகியவற்றின் மேன்மைக்கு சாட்சியங்களாகத் திகழ்கின்றன. சென்னையில் துவங்கி பெங்களூர் கல்கத்தா, பீகார், ராஜஸ்தான் என்று பல இடங்களில் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்கள். கப்பல், பணியாட்கள் புடைசூழ பல்லக்குகளில் சாலை வழிப்பயணம், என்று பெரிய யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்கள். (சென்னை, பெங்களூர் செல்லும் வழியில் எங்கள் ஊர் கிருஷ்ணகிரியையும் எட்டிப்பார்த்திருக்கிறார்கள். ஓசூர், சித்திரதுர்க்கம், ராயக்கோட்டை, சந்திரகிரி என்று திப்புசுல்தான் ராஜ்ஜியத்திலும் பதிவுகள் செய்திருக்கிறார்கள் மூன்றாம் மைசூர் போர் முடிவுக்கு வந்த நேரம். எங்கள் அரசன் திப்பு சுல்தானை கிழக்கிந்தியக் கம்பெனி வஞ்சகத்தால் தோற்கடித்த நேரத்தில் இந்த இரு டேனியல்களும் திப்புவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் அலைந்திருக்கிறார்கள். போரின் சீரழிவுகள் எதையும் இவர்கள் பதிவு செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் பதிவு செய்தவை எல்லாம் மனிதனும் இயற்கையும் உருவாக்கிய பிரம்மாண்டங்களையும் இந்தக் கலவையில் உருவான இயற்கை எழில்களையும், மாளிகைகள் மற்றும் ஆலயங்களையும்தான்தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் 3 செப்டம்பர் 1788ல் தங்கள் இந்திய யாத்திரையை துவங்கி இருக்கிறார்கள். கல்கத்தாவில் இருந்து கங்கை நதி வழியாகப் படகில் துவங்கிய இந்தப் பயணம், மே 1789ல் ஸ்ரீநகரில் முடிந்திருக்கிறது. மீண்டும் கல்கத்தா திரும்பிய போது வழியில் பல சரித்திர ஸ்தலங்கள், அரண்மனைகள், ஆலயங்கள் என அலைந்து அலைந்து பதிவுகளைத் தொடர்ந்து இருக்கிறார்கள்.10 மார்ச் 1792ல் கல்கத்தாவில் இருந்து சென்னைக்குக் கடல் வழியாகப் பயணித்து சென்னையில் இருந்து பெங்களூர் வரை பயணித்து பல இடங்களை ஓவியங்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள். பல்லக்கு, எருது பூட்டிய வண்டி, மற்றும் பல பணியாட்களுடன் இவர்களுடைய தென்னிந்தியப் பயணம் தொடர்ந்துள்ளது. அதே போல மேற்கு இந்தியாவிலும் பயணித்து எல்லோரா, எலிஃபெண்டா குகைகள் போன்றவற்றையும் வரைந்து தள்ளி இருக்கிறார்கள்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்