பனைமலை






காஞ்சி கயிலாயநாதர் கோயிலைக் கட்டிய மாமன்னன்தான் இந்தக் கோயிலையும் கட்டியிருக்க வேண்டும் என்று, தொலைவிலிருந்தே நமது கருத்தை தெரிவித்துவிடலாம். அதுதான் பனமலை தாளகிரீசுவரர் திருக்கோயில்.
விழுப்புரம்-செஞ்சி சாலையில், விழுப்புரத்திற்கு வடமேற்கில் 22 கி.மீ. தொலைவில் உள்ள அனந்தபுரத்தையடுத்து உள்ளது பனமலை. பச்சைப் பசேலென்று கண்ணைக் கவரும் வயல்களுக்கு நடுவே, நீண்ட மலை ஒன்று நம் கண் எதிரில் தெரிகிறது. பாறைமேல், ஒரு பூண்டு கூட முளைத்திடவில்லை. உச்சியிலே ஒரு கோயில் கம்பீரமாகத் தெரிகிறது.
சதுரமான கருவறையில் தாளகிரீசுவரர் அருள் பாலிக்கிறார். பனைமரத்தை தலமரமாகக் கொண்ட ஆலயங்கள் வரிசையில் பனமலையும் இடம் பெறுகிறது. ""தாள்'' என்பது பனையைக் குறிக்கும். அதனால்தான் ""தாளகிரீசுவரர்'' என்று திருநாமங்கொண்டுள்ளார். இடதுபுறம் அஸ்ததாளாம்பிகை தனிச் சன்னதி கொண்டுள்ளாள். காஞ்சி கயிலாயநாதர் ஆலயம் போலவே காட்சி தருகிறது. மூன்று தள மூலவர் விமானம். கருவறை விமானத்தைச் சுற்றிலும் சிங்கத் தூண்களிடையே, சிவபராக்ரம சிற்பங்கள். கருவறையின் உள்ளே, காஞ்சியைப் போலவே சோமாஸ்கந்தர் திருவுருவம் புரைக்கற்களால் ஆனது. மூலவர் தாளகிரீசுவரரின் இருபுறமும அயன்கலைமகள், அரி-திருமகள் சிற்பங்களைக் காணமுடிகிறது.

மலைப்பாதையிலேயே குகை ஒன்றில், சிம்மவாகினியாக அஷ்டதசபுஜ துர்க்கை ஒன்றும் உள்ளது.

வேப்பமரம் ஒன்றையும் அருகில் காண்கிறோம். பலநூறு ஆண்டுகளாயினும், பழமை மாறாமல் பொலிவு நீங்காமல், கம்பீரமாகக் காட்சித் தருகிறது பனமலை தாளகிரீசுவரர் திருக்கோயில். பனமலையைச் சுற்றிலும் உள்ள ஏழு ஊர்மக்கள், சித்திரை மாதத்தில் பெருவிழாக் கொண்டாடுகிறார்கள். சுவாமி ஏழு
ஊர்களுக்குத் திருவுலா செல்வது தனிச்சிறப்பு. பனமலைக்கு 3 கிமீ தொலைவில் மருதீசுவரர் அருள்பாலிக்கும் சங்கீதமங்கலம் குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்