நன்றி மறவா ஜீவனுக்காக நன்றியுடன் எடுக்கப்பட்ட நடுகல்



#எடுத்தனூர்நடுகல்

நன்றி மறவா  ஜீவனுக்காக நன்றியுடன்  
எடுக்கப்பட்ட நடுகல்

சங்க இலக்கியத்தில் நாய்கள்

பெருங்கற்காலம் தொட்டே மனிதர்களுடன் பயணித்து வருகின்றன நாய்கள் வேட்டைக்காக வும் காவலாகவும் செல்லப் பிராணியாகவும்  நாய்களை வளர்த்து வருகின்றனர் நாய்களை சங்க இலக்கியங்கள் ஞமலி, ஞாளி என்று கூறுகின்றன. சினமுற்ற வேட்டை நாய்களை ‘கதநாய்’ என்றும் குறிப்பிட்டுள்ளன

மான், முயல், பன்றி, உடும்பு போன்றவற்றை வேட்டையாடுவதில் நாயின் பங்கு குறிப்பிடத்தக்கது. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு ஆண்மகன் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கையில் ஒரு வேலுடன் வேட்டைநாய் பின்தொடரச் செல்வது பெருவழக்காக இருந்தது. வீட்டுநாய், வேட்டைநாய்களைப் பற்றி மட்டுமின்றி காடுகளில் வாழும் செந்நாய்களைப் பற்றியும் நீர்நிலைகளில் வாழும் நீர்நாய்களைப் பற்றியும் சங்ககாலப் புலவர்கள் இலக்கியங்களில் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

‘சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்’

என்ற பெரும்பாணாற்றுப்படை வரி, வேட்டுவக் குடிகளான எயினர் இன மக்கள், நாய்களைக் கொண்டு வேட்டையாடிய ஊன் உணவைப் பற்றிக் கூறுகிறது.

‘கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்’ என்ற புறப்பாடல் வரி, கானகத்து வாழ் வேட்டுவனையும், அவனோடு இணைந்து வாழ்ந்த நாயையும் குறிக்கிறது. குறிஞ்சி நிலத்தில் வேட்டைக்குப் பயன்பட்ட நாய்கள்தான், பின்னர் மெல்ல மருத நிலத்து மக்களால் ஆநிரை காவலுக்குப் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறான நாய்கள்தான் ‘பட்டி நாய்கள்’ என்று பெயர்பெற்றன

சங்ககாலத் தமிழர்களின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயானது காவலுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைப் பலபாடல்களின் வழியாக அறியமுடிகிறது. வீட்டுக்கு வெளியில் பந்தல்காலில் கட்டி வைக்கப்பட்ட நாயானது காவலில் சிறந்து விளங்கியதைப் பெரும்பாணாற்றுப்படை கீழ்க்காணுமாறு கூறுகிறது.

கணைக்கால் பந்தர் தொடர்நாய் யாத்த துன்னரும் கடி நகர் - பெரும்.125

காதலன் தன்னைச் சந்திக்க இரவுநேரத்தில் தனது வீட்டுக்கு வரும்போது காவலர்களாலும் காவல்நாய்களாலும் அவனுக்கு ஏற்படக்கூடிய இடையூறினைப் பற்றிக் கவலையுடன் கூறுகிறாள் செல்வந்தரின் மகளான ஒருகாதலி.

காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் - குறி.240

காவல்நாயானது வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடுகளுடன் சேர்ந்துகொண்டு வீட்டு முற்றத்தில் துள்ளி விளையாடி மகிழ்ந்திருந்ததைக் காட்டும் சங்கப் பாடல்கள் உள்ளன

கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை

ஏழகத் தகரோடு உகளும் முன்றில் - பட்.140.

நெல் உழு பகட்டொடு கறவை துன்னா

மேழகத் தகரோடு எகினம் கொட்கும் - பெரும்.326

'நெல்லுக்கு உப்பு வாங்கலியோ' என்று கூவியவாறு உப்புவிற்றுக்கொண்டு தெருவில் வருகின்றாள் ஒரு பெண். அவளது சத்தத்தைக்கேட்ட ஒருநாய் வீட்டுக்கு வெளியே வந்து அவளைப் பார்த்துக் குரைக்க, அப்பெண் அஞ்சி நடுங்குவதனை ஓவியமாகக் காட்டும் அகநானூற்றுப் பாடல்வரிகள்

நெல்லின் நேரே வெண்கல் உப்பு என

சேரி விலைமாறு கூறலின் மனைய

விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அகம்.140

செல்வந்தர் வீடுகளில் வளர்க்கப்பட்ட காவல்நாய்களுக்கென்றே தனித்தனியாக ஒருஅறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மரக்கழிகளைக் கொண்டு பொருத்திச் செய்யப்பட்ட ஒருகதவும் இந்த அறைக்கு இருந்தது. சாரல்மழையுடன் குளிர்ந்த காற்று வீசியபோது இந்த அறைக்குள் இருந்த காவல்நாய்கள் குளிரால் நடுங்கிய காட்சியை கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் விளக்குகிறது.

பெயல் உறு தண் வளி போர் அமை கதவ

புரைதொறும் தூவ கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் - நற்.132

சங்கஇலக்கியத்தில் பெரிதும் பேசப்பட்ட இந்த வாயில்லா ஜீவனுக்கும் ஒரு நடுகல் வரலாற்றின் மீது ஆர்வம் வந்த  காலம் தொட்டே இந்த நடுகல்லை பார்க்கும் ஆவல் இருந்தது

அதற்கான வாய்ப்பு தற்போது தான் கிடைத்தது

எடுத்தனூர்நடுகல்

திருவண்ணாமலை செங்கம் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எடுத்தனூர்
இவ்வூரில் உள்ள ஒரு வயல்வெளியில்  உள்ளது நடுகல் மண்ணில் பாதி புதைந்த நிலையில் உள்ளது
நடுகல்லில் வீரன் #பிரத்யாலீடாசனத்தில் நிற்கின்றான் அவன் பின்னால் ஒரு நாய் நிற்கின்றது காவலனை  கள்வர்கள் வீழ்த்தி விடுகிறார்கள் வீரனுக்கு துணையாக நின்ற நாய் அந்த அடிபட்ட வீரன் விழுந்து கிடந்த இடத்திலேயே அவனை அடித்து வீழ்த்திய இரு கள்ளர்களோடு போரிட்டு வீழ்த்தி வெற்றி கண்டது  

இந்த நடுகல்லில் 2 கல்வெட்டுக்கள் உள்ளன

ஒன்று வீரனுக்கும் இன்னொன்று நாய்க்கும்  
கல்வெட்டு வாசகம்  
வீரனுக்கான கல்வெட்டு

கோவிசைய
மயிந்திர பருமற்கு
முப்பத்து நான்காவது வாணகோ
அரைசரு மருமக்கள் பொற்றொக்கை
ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்
னெருமைப்
புறத்தே வா
டி பட்டா
ன் கல்

கோவிவ
ன்னென்னு
ந் நாய் (இ)
ரு கள்ள
னைக் கடித்
துக் காத்திரு
ந்தவாறு

செங்கம் பகுதியில் நடுகற்களை வழிபடும் வழக்கம்  இன்றும் உள்ளது இப்பகுதி மக்கள் நடுகற்களை வேடியப்பன் என்று அழைக்கிறார்கள் இங்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு ஆண்குழந்தையாக இருந்தால் வேடியப்பன் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் வேடியம்மா என்றும் பெயர் வைக்கிறார்கள்

சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு பற்றி பல பாடல்கள் உள்ளன

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி, நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய, மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும், அருமுனை இருக்கைத்து ....புறம் 329

நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட,
நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய
வென்வேல் விடலை

அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

மேற்கோள் நூல்கள்

செங்கம் நடுகற்கள்

சங்க இலக்கியத்தில் விலங்கினங்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்