சிலம்பின் காலம்

தமிழ்    நாட்டார் போற்றும் ஐம்பெருங்காவியங்களுள் தலைசிறந்தது
சிலப்பதிகாரம்.   பழந்தமிழ்      நாட்டின்  சீர்மைக்கும்  செம்மைக்கும்
சான்றாக  நிற்பது அப் பெருங்காவியம்.    சோழ நாட்டின் செழுமையும்
பாண்டிய  அரசாட்சியின்  சிறப்பும்,  சேர   நாட்டரசனது வீரமும் அக்
காவியத்திலே விளங்கக் காணலாம்.
இத்தகைய    சிலப்பதிகாரம்  எப்பொழுது தமிழ் நாட்டில் எழுந்தது?
அதைப்   பாடிய   இளங்கோவடிகள்    எப்பொழுது  தமிழ்  நாட்டில்
வாழ்ந்தார்?  அவருடன்  பிறந்த    செங்குட்டுவன்  எப்பொழுது அரசு
வீற்றிருந்தான்? இவற்றைச் சிறிது பார்ப்போம்.
சிலப்பதிகாரத்தைப்     பொது நோக்காகப் பார்க்கும் பொழுது தமிழ்
நாடு  சிறந்த  நிலையில் இருந்த   காலமே சிலப்பதிகாரக் காலம் என்று
தோன்றுகின்றது.  சேர  சோழ    பாண்டியர்கள் தமிழ்நாட்டை யாண்ட
காலம்  அது.  இயல்,  இசை,    நாடகமென்னும் முத்தமிழும் செழித்து
வளர்ந்த  காலம்  அது.  கடல் வழியாக நிகழ்ந்த   வாணிகத்தால் தமிழ்
நாட்டிலே செல்வம் பெருகி நின்ற காலம் அது.
அக்காலத்தில்    காவிரிப்பூம்பட்டினம்   சோழ   நாட்டின்     சிறந்த
துறைமுக நகரமாகத் திகழ்ந்தது.
காவிரியாறு    கடலோடு  கலக்குமிடத்தில்   வளமும் அழகும் வாய்ந்து
விளங்கிற்று  அந்நகரம்.  பட்டினம்    என்னும் சொல், சிறப்பு வகையில்
காவரிப்பூம்பட்டினத்தையே குறிப்பதாயிற்று.    இக் காலத்தில் பட்டணம்
என்பது   சென்னைப்   பட்டணத்தைக்      குறிப்பது  போன்று  அக்
காலத்தில்   பட்டினம்  என்னும்  பெயர்     காவிரிப்பூம்பட்டினத்திற்கு
வழங்கிற்று.  அழகு  வாய்ந்த     அப்பட்டினத்தைக்  கவிகள் பூம்புகார்
நகரம்  என்றும்  அழைத்தார்கள்     “பூம்புகார்  போற்றுதும் பூம்புகார்
போற்றுதும்” என்று பட்டினத்தைப்    பாடினார் சிலப்பதிகார ஆசிரியர்.
அந்நகரின்   துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது
நடந்தன.  தமிழ் நாட்டாரோடு   வாணிகம் செய்து வளம் பெற்ற யவனர்
என்ற     கிரீக்கர்கள்    காவிரிப்பூம்பட்டினத்தின்       கடற்கரையில்
விண்ணளாவிய  மாடங்கள் கட்டிக்    குடியிருந்தார்க்ள. தெய்வமணமும்
அந்நகரிலே   கமழ்ந்துகொண்டிருந்தது.     சிவன்  கோயில்,  முருகன்
கோயில்,  பெருமாள்  கோயில்,    வாசவன்  கோயில்  - இன்னும் பல
கோயில்கள்  அங்கு  நின்று  அணி    செய்தன.  ‘இந்திரன்  திருநாள்’
கோலாகலமாக  இருபத்தெட்டு  நாள்    கொண்டாடப்பட்டது. இங்ஙனம்
காவிரிப்பூம்பட்டினம்   பொருள்  வளமும்    தெய்வ  நலமும்  பெற்று
விளங்கிய காலமே சிலப்பதிகாரக் காலம்.
அக்     காலத்தில் சேர நாட்டை ஆண்டவன் ஒரு சிறந்த மன்னன்.
செங்குட்டுவன் என்பது அவன் பெயர்.   கற்புத் தெய்வமாகிய கண்ணகி
தன் நாட்டில் வந்து
விண்ணுலகம்     அடைந்தாள்    என்று    அறிந்த   செங்குட்டுவன்,
அவளுக்குத்   தன்     தலைநகரத்தில்   ஒரு   கோயில்  கட்டினான்;
இமயமலையிலிருந்து  சிலை எடுத்து   வந்து,  கண்ணகியின் திருவுருவம்
செய்து,  அக்கோயிலில் நிறுவினான்;    அத்திருவிழாவைக் காண அயல்
நாட்டு அரசர் சிலரை அழைத்திருந்தான்.
“அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்”
 
அங்கு வந்திருந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
இக்   காட்சிகளை யெல்லாம் கண் களிப்பக் கண்டார் செங்குட்டுவன்
தம்பியாகிய  இளங்கோ.    அவர் செந்தமிழ்ச் செல்வர்; இளவரசுக்குரிய
பதவியை  உதறியெறிந்து,    முனிவராயிருந்து  தவம்  புரிந்தவர். அவர்
அரச குலத்திற் பிறந்த    பெருமையும், துறவு பூண்டு ஆற்றிய தவத்தின்
அருமையும் தோன்ற அவரை    ‘இளங்கோ அடிகள்’ என்று தமிழுலகம்
பாராட்டுவதாயிற்று.   சிலப்பதிகாரம்    பாடியவர்  அவரே.  இளங்கோ
அடிகள்  இயற்றிய  காவியத்தை,     ‘நெஞ்சையள்ளும்  சிலப்பதிகாரம்’
என்று போற்றினார் பாரதியார்.
“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை கண்டதும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தருமம் வளர்த்ததும்

..............................................................

அன்ன யாவும் அறிந்திலர் பாரதர்
ஆங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்”
என்று  பரிந்து  பாடிய   பாட்டில், சேரன்   செங்குட்டுவன் தம்பியாகிய
இளங்கோவடிகளைப் போற்றுகின்றார் பாரதியார்.
இத்தகைய  சிலப்பதிகாரத்தின்  காலத்தைத்  தெரிந்துகொள்வதற்குச்
சேரன்    செங்குட்டுவன்      காலத்தை     ஆராய்ந்து     அறிதல்
வேண்டும்.  வீரனாகிய அச்    சேரனைப்        பல      புலவர்கள்
பாடியுள்ளார்கள்.     அவர்களுள்    பரணர்     என்பவர்   ஒருவர்.
தமிழ்நாட்டில்    சங்கப்   புலவர்கள்   என்று     பாராட்டப்படுகின்ற
புலவர்களுள்  பரணருக்கும்   கபிலருக்கும் ஒரு தனிப்  பெருமையுண்டு.
‘பொய்யறியாக் கபிலரோடு பரணர் ஆதிப் புலவோர்’  என்ற வரிசையில்
வைத்துப் புகழப்பட்ட பரணர், சேரன் செங்குட்டுவனைப்பற்றிப்   பாடிய
பாடல்களுள்  பதினொன்று  நமக்குக்  கிடைத்துள்ளன.   பரணருடைய
புலமையையும்  பண்பையும்  பெரிதும்  மதித்த  சேரன்,    அவருக்குச்
சிறந்த    பரிசில்   அளித்ததோடு   தன்   மகனையும்     அவரிடம்
மாணாக்கனாக    ஒப்புவித்தான்    என்பது     பண்டை   நூல்களால்
விளங்குகின்றது.  எனவே,  சங்கப்  புலவர்களாகிய    பரணர்  முதலிய
சான்றோர் வாழ்ந்த காலமே செங்குட்டுவன் காலமாகும்.
அக்   காலத்தை இன்னும் சிறிது தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குச்
சிலப்பதிகாரமே   ஒரு   சிறந்த    சான்று  தருகின்றது.  கண்ணகியின்
திருவிழாவிற்குச்   சேரன்   செங்குட்டுவன்     அனுப்பிய  அழைப்புக்
கிணங்கி  வஞ்சி மாநகரில் வந்திருந்து, பத்தினிக்   கடவுளை வணங்கிய
மாநகரில்   வந்திருந்து,  பத்தினிக்  கடவுளை    வணங்கிய  அரசருள்
ஒருவன், ‘கடல் சூழ் இலங்கைக்
கயவாகு     மன்னன்’      என்பதை      முன்னமே    கண்டோம்.
இலங்கையரசனாகிய   கயவாகுவின்   காலத்தைத்  தெரிந்துகொண்டால்
செங்குட்டுவன்   காலமும்     விளங்கிவிடுமன்றோ?   இந்த  வகையில்
சரித்திர  ஆசிரியர்களாகிய கனகசபைப்   பிள்ளை முதலிய அறிஞர்கள்
ஆராய்ந்திருக்கிறார்கள்.    இலங்கையரசர்      வரலாற்றைக்   கூறும்,
‘மகாவம்சம்’  என்ற  நூலில்  கஜபாகு    என்னும் பெயருடைய மன்னர்
இருவர்   குறிக்கப்படுகின்றனர்.   முதல்  கஜபாகு  கி.பி.    இரண்டாம்
நுாற்றாண்டின்  பிற்பகுதி*யில்  அரசாண்டவன்.  அவன்    காலத்துக்கு
ஏறக்குறைய  ஆயிரம்  ஆண்டுகளுக்குப்  பின்பு    மற்றொரு  கஜபாகு
அரசு   புரிந்தான்.   இவ்விரண்டு  அரசர்களில்    முதல்  கஜபாகுவே
செங்குட்டுவன் அரசாண்ட காலம் இரண்டாம் நூற்றாண்டின்    முற்பகுதி
என்பது தெளிவாகின்றது. அதுவே சிலப்பதிகாரத்தின் காலமும் ஆகும்.
இன்னும்,    இக்கொள்கைக்கு ஆதாரமான  செய்திகளிற் சிலவற்றைப்
பார்ப்போம்;  கரிகாற்சோழன்  என்னும்    திருமாவளவன் காலத்திற்குப்
பின்பு   சோழ   நாடு    உலைவுற்றுச்  சீரழிந்ததது.  பூம்புகார்  என்ற
காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு சோழன்   அரியணை ஏறினான். உறையூர்
என்னும்     உள்நாட்டுத்     தலைநகரில்      மற்றொரு    சோழன்
அரசனாயினான்.   புகார்ச்    சோழனுக்கும்  உறையூர்ச்  சோழனுக்கும்
போர்  மூண்டது.  அப்போரின்  தொல்லை    ஒருவாறு  தீர்ந்த பின்பு,
‘பட்ட  காலிலே  படும், கெட்ட குடியே கெடும்’   என்ற பழமொழிப்படி,
சோழ நாட்டிற்கு ஒருபெருந் தீங்கு   நேர்ந்தது. குணகடல் கரை புரண்டு
எழுந்து காவரிப் பூம்பட்டினத்தை அழித்தது. இக்கொடுமை நெடுமுடிக்
கிள்ளி     என்னும்     சோழமன்னன்   காலத்தில்  நிகழ்ந்ததென்று
மணிமேகலை   கூறும்.   அப்போது  அந்நகரில்  இருந்த  மாடங்கள்,
கோயில்கள்,     கோட்டங்கள்       எல்லாம்     அழிந்தொழிந்தன.
மாடமாளிகையை   இழந்த   மன்னன்  அந்நகரினின்றும்  வெளியேறிய
செய்தியை இரக்கத்தோடு கூறுகின்றார் மணிமேகலையாசிரியர்:
“விரிதிரை வந்து வியன்நயர் விழுங்க
ஒருதனி போயினன் உலக மன்னவன்”
என்னும்     மணிமேகலை   அடிகளில்   சோகம்   நிறைந்திருக்கிறது.
‘துன்பம்    வந்துற்றபோது   துணையாவார்   யாருமின்றித்   தன்னந்
தனியனாய்   அந்நகரினின்றும்   வெளிப்போந்தான்  மன்னர் மன்னன்’
என்பது அவ்வடிகளின் கருத்து. 
இவ்வாறு     அழிந்ததாக    மணிமேகலையிற்   சொல்லப்படுகின்ற
காவிரிப்பூம்பட்டினம்    ஏழாம்    நூற்றாண்டில்   எழுந்த   தேவாரப்
பாசுரத்தில்   ஒரு சிற்றூராகக்  குறிக்கப்படுகின்றது; சிலப்பதிகாரத்திற்கும்
தேவாரத்திற்கும்   இடைப்பட்ட   ஐந்நூறு ஆண்டுகளில் சோழ மன்னர்
தம்  நிலையில்  தாழ்ந்தனர்.  காஞ்சி  புரத்தைத் தலைநகராகக்கொண்டு
அரசாளத்    தலைப்பட்ட  பல்லவர்கள்   சோழ  நாட்டிலும்  ஆணை
செலுத்தினர்.      பழம்பெருமையெல்லாம்       இழந்து       நின்ற
காவிரிப்பூம்பட்டினத்தில்   அன்புகொண்டு   ஒரு   பல்லவன்  அங்குச்
சிவாலயம்    கட்டினான்;     அதற்குப்     பல்லவனீச்சரம்    என்று
பெயரிட்டான்.    பல்லவன்    கட்டிய   ஈசன்  கோயிலாதலின்,  அது
பல்லவனீச்சரம்    என்று    பெயர்    பெற்றது.   தேவாரம்   பாடிய
திருஞானசம்பந்தர் காலத்தில் பல்லவனீச்சரம் அவ்ருளே    காட்சியளித்தது.  “பட்டினத்துறை  பல்லவனீச்சரம்”  என்று
அக்கோவிலைப்       பாடினார்        ஞானசம்பந்தர்.      எனவே,
காவிரிப்பூம்பட்டினம்  சோழர்  ஆட்சியில் சிறப்புற்று விளங்கிய காலமே
சிலப்பதிகாரக்    காலம்.   அது  பதங்குலைந்து  பல்லவர்  ஆட்சியில்
அமைந்த காலம். தேவாரக் காலம் என்பது தெளிவாகின்றது,
தமிழ்     நாட்டில் பல்லவர்   எப்போது அரசாண்டனர்? மூன்றாம்
நூற்றாண்டு   முதல்   ஒன்பதாம்    நூற்றாண்டுவரை  அவர்  ஆட்சி
புரிந்தனர்    என்று      சரித்திரம்    கூறும்   சிவனடியார்   பாடிய
தேவாரத்திலும்,     திருமால்      அடியார்களாகிய    ஆழ்வார்களது
திருப்பாசுரத்திலும்    பல்லவர்      குறிக்கப்படுகின்றனர்.    ஆனால்,
சிலப்பதிகாரத்தில்       அம்மன்னரைப்பற்றிய     குறிப்பு    ஒன்றும்
காணப்படவில்லை.  ஆதலால்,   சிலப்பதிகாரம் எழுந்த காலம் பல்லவர்
ஆட்சிக்கு முற்பட்ட காலம் என்று கொள்ளப்படுகின்றது.
தொன்று     தொட்டுத்  தமிழகத்தை  ஆண்டுவந்த   சேர  சோழ
பாண்டியர்,     பேரும்     புகழும்    பெருவாழ்வும்    பெற்றிருந்த
காலத்திலேதான்    சிலப்பதிகாரம்   பிறந்தது.   விண்ணளாவி  நிற்கும்
இமயமலையில்    சோழநாட்டுப்   புலிக்கொடியை  ஏற்றினான்  கரிகால்
சோழன்.  சேர   நாட்டு   அரசனாகிய  நெடுஞ்சேரலாதன், ‘தென்குமரி
முதல்  வட  இமயம்வரை  ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன்’
என்று   புகழப்பெற்றான்.  அவனுடைய   ஆணை  இமயமலை யளவும்
சென்றமையால்  அவன்,   ‘இமயவரம்பன்   நெடுஞ்சேரலாதன்’  என்று
தமிழ்நாட்டில்     வழங்கப்பெற்றான்.     அவன்    மகனே    சேரன்
செங்குட்டுவன். தந்தையின் புகழைத்தானும்     பெற   ஆசைப்பட்டுக்   குட்டுவனும்   வடநாட்டின்   மீது
படையெடுத்தான்;     தமிழரசைப்  பழித்துப்  பேசிய  வடநாட்டாரைப்
போர்க்களத்திலே  வாட்டி   வென்றான்;   இருவரைச் சிறை பிடித்தான்;
தன்   நாட்டிற்குக்   கொண்டு வந்தான். கண்ணகித் தெய்வத்திற்கு அம்
மன்னன்   திருவிழா   எடுத்தபோது   அவ்விருவரும்   உடனிருந்தனர்
என்று   சிலப்பதிகாரம்    கூறுகின்றது.    எனவே,   தமிழ்நாட்டாரின்
வீரப்புகழ்  வடநாட்டிலும்  பரவியிருந்த காலம்; தமிழ்நாடு வாணிகத்தால்
வளம்பெற்று   ஓங்கி  நின்ற  காலம்;   தமிழ்ப்  புலவர்  பல்லாயிரவர்
தமிழ்த்தாய்க்குப்   பல  வகையான   கவிதைக்  கலன்களை  அணிந்து
கோலம்  செய்து கொண்டிருந்த  காலம்;  அக்காலமே சிலப்பதிகாரத்தின்
காலம்.
தமிழ் இன்பம்
 
ரா.பி.சேதுப்பிள்ளை
* கி.பி.176-193
  சென்னை  வானொலி  நிலையத்திலே  பேசியது.  நிலையத்தார்இசைவு பெற்றுச்சேர்க்கப்பட்டது.





கருத்துரையிடுக

1 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்